எங்கும் தமிழ்...! எதிலும் தமிழ்...!

என் அன்னை தமிழுக்காக...! - வே.கணேஷ்(எ)கலாம்தாசன்

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

என் பேனாவுக்கும் எனக்கும் சண்டை!
























 






தடக்கென நான் அதன்
தலைக்கவசம் கழற்ற...
கொட்டாவி விட்டபடி
கவிதையா? என்றது...

ஆம்! எனச் சொல்லி..
அணைத்தேன் விரல்களால்...
அதன் இதழ் கொண்டு தாள் இணைத்தேன்...

அரை தூக்கம் போல...?!
அரைகுறையாய் பதிந்தது...

வழக்கம் போலவே,
'அவள்' எனத் துவங்க...
"இன்றைக்கும் காதலா..?!" - என
ஓரமாய் பார்ப்பது போல்..
ஒரு சாய்ந்து நின்றது...!

சரி!
வேண்டாம் காதல் இன்று...!
வடிப்போம் வேறு கவிதையொன்று..
என்றே நான்...

நிலவில் துவங்கி...
மழை, ஈழம், வானவில், விலையேற்றம்..
என,
என்னென்னவோ தலைப்பில்..
ஏதேதோ துவங்கி...
எழுதி...
கிறுக்கி...
அடித்து..
இப்படி நீண்டு கொண்டேயிருக்க...

கோபமாய் கொந்தளித்து...
கோடெல்லாம் கொப்பளித்து...
'நீலக் கோடி வடித்து'!
முறைத்ததேன் பேனா!

இது என்ன கோபம்?!
உனக்காக அல்லவோ,

'காதலை, கவிதையில் இன்று துறக்க துணிந்தேன்'..?
என,
கண்ணருகே கொண்டுவந்து,
கனிவுடனே பார்த்தேன்!

"சொல்வதெல்லாம் சுத்த பொய்..
காதலை விடுத்து கவிதைகள் வடிக்க,
உனக்கு இஷ்டமில்லை...
இதயத்தின் இடுக்குகளிலும்..
மூளையின் மடிப்புகளிலும்..
பரவசமாய் பரவிக் கிடக்கிறது உன் காதல்!
நீ அவளோடு இரு...
என்னை விடு..!!"
என்று எண்ணியதோ என்னவோ?
தற்கொலைக்கு முயல்வது போல்...
தரை நோக்கிச் சென்றது!

பரிதவிப்பாய் குனிந்து,
பதற்றமாய் பற்றினேன்...
'என் இருப்பத்தியோரவது விரலை...
இதயத்தோடு அணைத்தேன்!'

தைரியம் சொன்னேன்..
அணைப்பில் ஆறுதல் சொன்னேன்...

'மை கொட்டும் உன் மேல் தான்..,
முதல் மையல் எனக்கென்றேன்!'




உன்னை என்னிருந்து பிரித்துப் பார்ப்பதும் ஏனோ..?
நம் காதல் உனக்கிங்கு கசப்பது முறையோ?
எனக்கு முன்பே கவிதையின் வாயிலாய்,
நீ அவளுக்கு பரிட்சயம் என்பதை மறந்தாயோ?

காதல் என்னுடயதேன்றால், அதன் வடிவம்
உன்னுடையதன்றோ?!
எண்ணம் என்னுடையதென்றால், எழுத்து
உன்னுடையதன்றோ?!


 






'என் கண் போல..
பேசும் வாய் போல...
ஸ்பரிசிக்க வைக்கும் கை போல...
என் காதலைச் சொல்லும்...
இன்னொரு புலன் நீ..!!!'

என்னை காதலித்தால்..
உன்னையும் சேர்த்தே அவள் காதலிப்பதாய் பொருள்!
இப்படி நீ கோபிப்பது..
உன் காதலிக்கே நீ செய்யும் துரோகமன்றோ?!

இதை நீ,
உணராயோ?
இனியேனும் உணர்வாயோ?

என்று,
உணர்ச்சிமயமாய் உருகிமொழிந்தே
பேனாவை கிடத்தி கிளம்பிச் சென்றேன்!





பாவம் என் பேனா!
தலை குனிந்து நிற்பது போல்,
தலைகீழாய் கிடந்தது!


 





பின்னிரவில்,
அரைமயக்க பிம்பத்தில்,
யார் கொண்டு சேர்த்தார்களோ?
எனைப் பார்த்தபடி...
என் அருகே.. என் பேனா..!

மயக்கும் அதன் மையின் நெடி..
மூச்சில் கலந்து, மூளைக்குச் செல்ல,
இதழ் மலர்ந்தது... இமை மடிந்தது!

உன் கைக்குட்டை வேணுமடி எனக்கு! (O! Dear! Give me your kerchief please!!!)



மெய்யாய் நான் கண்ட கனவு.. கொஞ்சம் கற்பனையை கலந்திங்கே கவிதையாய்....




நான் ரசிக்கும் குறுந்தொகையே!
எனை ஈர்த்த சிறுநதியே!
மழலை போல் துயிலும் - என்
குழந்தைக் காதலியே!

இமை திற...!

பதறாதே..
நான் தான்.!

'இப்போது ஏன்?' என வியக்காதே..
விவரிக்கிறேன்.!

************************

'மலரென மகிழ்ந்து - உன்
கருவிழியை வண்டு நோக்கும்!' - என
உவமைகள் கூறி,
உவகையுற வரவில்லை!
பாவம்! வண்டுகளுக்கும் வேறு வேலை இருக்கும்!

நிலவையும் உன்னையும் கூட்டி,
ஒரு சேர ரசித்து,
'நிலவினும் அழகு நீயே!' என
இன்புறவும் விரும்பவில்லை!
இன்றாவது நிலவு ஓய்வெடுக்கட்டும்!

உன் கையோடு கையணைத்து,
கற்பனையில் மூழ்கி
களிப்புறும் உத்தேசமும் எனக்கு சுத்தமாயில்லை!

ஓ!
'பின் எதற்கு வந்தாய்?'
உன் விழிகளின் வினா
புரியாமல் இல்லை!

இனியவளே....
நான் வந்த நோக்கமே வேறு!

************************

நீ இல்லா நேரங்களில்,
உன்னோடு நான் இருக்க...
உன்னோடு நிதம் இருக்கும்,
உன் கைக்குட்டை வேணும் எனக்கு!

நான் தீண்டா உன்னை..
தினம் தீண்டித் தழுவும்,
உன் கைக்குட்டை வேணுமடி எனக்கு!

நான் ஒன்றும் புதியவன் அல்ல....
உன் பழைய கைக்குட்டையே கொடு!

உன்னோடு இருப்பதே பெருந்தகுதி என்றாலும்,
உன் பிரதியாய் நான் உணர,
முழுத்தகுதி வேணும் அதற்கு!

தகுதியா??!
தடுமாறதே!
ஒவ்வொன்றாய் உதிர்க்கிறேன்..
உள்ளத்தில் சூடு!

************************

உன் உதடுகளை
முன்னூறு முறையாவது அது
முத்தமிட்டிருக்க வேண்டும்!

நீ மடித்து மடித்து
சிறிதேனும் அது
சிறுத்திருக்க வேண்டும்!

எங்கேனும் தவறவிட்டு..
தேடித் தேடித் தவித்திருக்க வேண்டும்!

நீ ரசித்த மழையொன்றில்..
உன்னோடு தானும் சேர்ந்து,
இன்பமாய் அது நனைந்திருக்க வேண்டும்!

உனையன்றி வேறொருவர்..
விரல் கூட அதை
வருடாதிருந்திருக்க வேண்டும்!

ஒளி வீசும் உன் விழியில்
நீர் பெருக கண்டிட்டால்...
அனிச்சையாய் அதை அணுகி,
உன் கைக்கு முன்னால்
கண்ணீர் கழுவியிருக்க வேண்டும்!

உன் ஆடைகளை அணைத்துக் கொண்டே..
வெயில் காய்ந்திருக்க வேண்டும்!

உனையோத்த பூ ஒன்று, செயற்கையாய்
அதில் பூத்திருக்க வேண்டும்!

உன்னின் ஸ்பரிசம் அதில்
எங்கெங்கும் பரவியிருக்க வேண்டும்!

அழகான நாள் ஒன்றில்
உன் கண்ணில் அதை அணிந்து,
மழலையாய் மாறி..
நீ கண்ணாம்பூச்சி ஆடியிருக்க வேண்டும்!

நீ பொழிந்த மழையில்
குளித்திருக்க வேண்டும்!

அதன் மேனி முழுவதும்..
உந்தன் வாசம் வீச வேண்டும்!

ஏன் சிரிக்கிறாய்!?
"காதலா! கைக்குட்டைகே இத்தனை கட்டளையா?"
என்றா?

என்ன செய்ய?
நீ விடும் மூச்சைக் கூட,
இசையென ரசிக்கும் இந்த
மடக்கவிஞன்,
கைக்குட்டையையா விட்டு வைப்பான்?

இது போன்ற
கைக்குட்டை ஒன்றில்..
ஆயிரம் முத்தங்களுடன்.. உன்னின்
அத்தனை காதலையும் சேர்த்து
கவிதை போல் கோர்த்து,
கண்மூடி காத்திரு....!

கனவில் வருகிறேன்!!!!

எங்கே....
இப்போது இமை மூடு..!

நான்... நானில்லை! (I am not I am)


நான்,
"நானாக" இருந்ததே இல்லை!

விழி விரியும் காலை முதல்,
இமை உறங்கும் நேரம் வரை..
எப்போதும் நான்,
"எனைக்" காண முடிவதில்லை!

ஏன்?
கனவில் கூட,
பலசமயம்...
என்னை.. "என்னாகவே",
காண்பதரிதே!

இது தான் 'நான்' என,
எனை உலகம் நினைக்கிறதோ..
நிச்சயமாய்
அது நான் அல்ல!

எது "நான்" என..
நான் அறிந்த வரை ,
"எனையன்றி" வேறொருவர்,
அறிந்திருக்க வாய்ப்பில்லை!

நான் ஏன் "நானாகவே" இல்லாது,
நீங்கள் அறியும் 'நான்' ஆனேன்..??!

ஹும்!
தானே வேடமிட்டுள்ள,
நான் பிறந்த இவ்வுலகம்..
எனை மட்டுமா..
"என்னாகவே" ஏற்கும்..???

என்னை, "என்னாகவே"..

ஏற்காத இவ்வுலகம்
"நான்" இல்லா என்னை..
'நான்' என்றதும் ஏற்றது..!

சரி..!
நான் மட்டும் தான்,
"நானாக" இல்லாது
"நான்" போல நடிக்கிறேனா?

நீங்களே கொஞ்சம் சொலுங்கள்!!

நீங்கள் என்றால்,
நான் காணும் 'நீங்கள்' இல்லை!
நீங்கள் மட்டும் அறிந்த,
"உங்களை...!!!"

ஒரு புது முயற்சியாக.. (தமிழுக்கோ.. கவிதைக்கோ அல்ல.. என்னின் புதுமுயற்சியாக!)
ஒரே நபரை மூன்று விதமாக உலவ விட்டிருக்கிறேன்!
"நான்" - நான் மட்டும் அறிந்த உண்மையான நான்!
'நான்' - இந்த உலகம் அறிந்த நான்!
நான் - பிரதி பெயர்ச்சொல்(pronoun)!

இக்கவிதையை படிக்கும் நண்பர்களால், படிக்கின்ற நேரத்திலேயே இந்த வேறுபாட்டை உணர முடிந்தால்!
என்னின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக எண்ணி.. உற்சாகமடைவேன்!
உணர முடியாத பட்சத்தில்., அதி உற்சாகமாக.. மேம்படுத்த முயல்வேன்!

மீண்டு வா தாயே! (Mother! please come again!)

உன் வயிற்றில்
எனை உதிர்த்தாய்!
நான் மலர்வதற்குள்,
ஏனம்மா நீ உதிர்ந்தாய்?

வளர்பிறையாய் எனை வளர்க்க,
தேய்பிறையாய் நீ தேய்ந்தாய்!
முழுமதியாய் நான் மாற்வதற்குள்,
ஏனம்மா நீ தீய்ந்தாய்?

சிலையாக எனை செதுக்க,
வலி தாங்கும் உளி ஆனாய்!
சிற்பமாய் நான் சிரிப்பதற்குள் ,
ஏனம்மா நீ பலியானாய்?

ஆறுகுளம் ஏரியென,
அத்துனையும் கடக்க வந்தாய்!
நீந்த நான் கற்பதற்குள்,
ஏனம்மா விட்டுச் சென்றாய்?

கைப்பிடித்து நடக்க வைத்தாய்!
கதை கூறி உறங்க வைத்தாய்!
கண் விழித்து நான் பார்பதற்குள்,
ஏனம்மா நீ மறைந்தாய்?

விதைவிதைத்து நீர் வார்த்தாய்!
உரமிட்டு பயிர் காத்தாய்!
விளைந்திங்கே நான் நிற்க,
விதைத்தவளே நீ எங்கே?

இறை செய்த பிழை தானோ?
விதி செய்த சதி தானோ?!

நதி போல நீர் பெருக்கி,
கதியற்று கண் கலங்கி,
நீ பெற்ற நான் இருக்க...
நீ மட்டும் இல்லையம்மா?!

நீயில்லா உலகிதிலே,
நான் தனியே என்ன செய்வேன்?
பெருமரமே வீழ்ந்தப் பின்னால்,
சிறு பறவை என்ன செய்யும்?!

அழுதழுது துடிதுடித்து,
படும் துன்பம் போதுமம்மா!
ஒன்று..
கைநீட்டி கண்ணீர் துடை!
இல்லை..
கைப்பிடித்து என்னைக் கூட்டிச்செல்!

நீ... நான்..... காதல்...!!!! (You, Me and Love!)



இதோ!
இன்றைக்கும் சேர்த்து,
எழுநூற்றி முப்பது நாட்களாகிறது!

இரண்டாவது முறையாக,
சூரியனை
நம் காதல் வலம் வந்துவிட்டது!

பிறை, அரை, முக்கால், முழு என
அத்தனை வடிவிலும்
நிலவை கண்டு மகிழ்ந்தாகிவிட்டது!

குழந்தையின் சிரிப்பில் துவங்கி,
குறுஞ்செய்தி வரை,
தூரல், பாடல், கவிதை, கால்தடம் என
ஏறத்தாழ எல்லாமே ரசித்தாகிவிட்டது!

ஓரப் பார்வை!
நேரங் கடந்த பேச்சு!
சண்டை, சிணுங்கள், கொஞ்சல், குலவல் 
அழுகை, சிரிப்பு, பிரிவு,தேடல் என
காதலின் அத்தனை ரசங்களும்
கிட்டத்தட்ட அரங்கேறிவிட்டது!

இத்தனைக் கடந்த பின்னும்,
முதல் நொடிபோல்,
இந்த நொடி
எந்தன்
உள்ளமெல்லாம்
உவந்து சிரிப்பதும் ஏனோ?!

அவசரமாய் வீசும் காற்று
பரவசமாய் உணரப்படுவதும் எதனாலோ?

"நாம் ரசித்த அதே நிலா
இன்றைக்கும் ஏன் புதிதாய் தெரிகிறது?"

இது என்ன?
உன்னை நினைக்கும் போதெல்லாம்
கைகளுக்குப் பின்னால்
இரண்டு இறக்கைகள் விரிகின்றன?!

இந்த உதடுகளுக்கு
வந்த திமிரை பார்த்தாயா??
உன் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறதாம்!

என் பேனாவோ
அதற்கு மேலே!?
உனைப் பற்றி எழுதாத நேரங்களில் எல்லாம்
மௌனவிரதம் தான்!

உனக்கொன்று தெரியுமா?
நெஞ்சில் நீ பூத்த நாள் முதல்
நான் கண்ட பூவெல்லாம்,
எனைக் கண்டு சிரிக்கிறது!

பறவைகளுக்குக் கூட உற்சாகம்தான்!
கூட்டமாய் ஆடிப்பாடி,
குதூகலிக்கிறது!

ஐயோ!!!!
மேல்நோக்கி நேர்க்கோட்டில்,
மூன்று முள்களும்
இணையப் போகின்றன!

மூன்றாம் ஆண்டின்
முதல் கனவில்
உனை ரசிக்க வேண்டாமா?!

இதோ!
விழி மூடி
வழி திறக்கிறேன்!
நம் மூவருக்காய்!
நீ... நான்..... காதல்...!!!!

என்னுள் இருக்கும் கவிஞன்...! (A crazy poet within me!!)



என்னுள் இருக்கும் கவிஞன் - பெரியதோர் கொடுங்கோலன்...!

ஒருபோதும் என்னை அவன் உறங்கவிட்டதில்லை...
சற்றே கண்ணயர்ந்தாலும்,
என் கனவுகளையும் அவன் விட்டு வைத்ததில்லை...
சரி! கனவைப் பார்த்து கவிபாடுகிறானா? எனில்,
அதுவும் இல்லை!
எப்போதோ பேனா எடுக்க,
எப்போழுதும் என்னைப் பாடாய்படுத்துகிறான்!

என்னுள் இருக்கும் கவிஞன் - பிழைக்கத்தெரியாதவன்...!
புறநானூறு படித்து பூரிக்கின்றான்!
'நந்திக்கலம்பகத்தின் நயம் எண்ணே!' என நெகிழ்கிறான்...
பதவி உயர்வுக்காய், நான் படிக்க அமர்ந்தாலும்,
'பாரதியை' காட்டி பல் இளிக்கிறான்!
புத்தகங்களை படிக்கிறானோ இல்லையோ...
புத்தகங்களோடு தினமும் படுக்கிறான்!

என்னுள் இருக்கும் கவிஞனுக்கும், காதலுக்கும் தூரமில்லை!
அவன் பாடும் கவியில்,
பாதி கவி..
பாவையர்தம் காதலைப் பற்றியதே!
நிச்சயமாய் அவன்
காதலித்துக் கொண்டிருக்ககூடும்!
அல்லது
காதலை கடந்திருக்கக்கூடும்!

என்னுள் இருக்கும் கவிஞன் - ஊர் பேச்சைக் கேளாதவன்!
'முள்ளின் பெருமை -
காலால் உதைத்தவனை கையால் எடுக்க வைக்கிறது'
என ஊர் சொன்னால்,
'மனிதனின் பெருந்தன்மை -
குத்திய முல்லை கையில் எடுத்து ரசிக்கிறான்'
என இவன் சொல்வான்!
ஊர் ஒன்று சொன்னால், இவன் வேறு சொல்வான்
சுய புத்தி இருக்க, சொல் புத்தி எதற்கென்பான்!

என்னுள் இருக்கும் கவிஞன் - அறிவற்ற மூடன்!
பணம் ஈட்டி,
பொருள் கூட்டச் சொன்னால்,
கவிபாடி காலங்கழிக்கிறான்!
கலை, கனவு, கற்பனை என
கண்டதெல்லாம் பேசுவான்!
தட்டிக் கேட்டால்,
'என் உலகம் நின்னினும் பெரிது!' என
தத்துவம் பேசுவான்!

என்னுள் இருக்கும் கவிஞன் - தன்னலமான தற்பெருமைக்காரன்!
இல்லையேல்,
தன்னைப் பற்றி
தானே கவிதை புனைந்து,
இங்கே பிரசுவிக்கவும் செய்வானோ?!

அட!
என்னுள் இருக்கும் கவிஞன்
அப்படியே இருக்கிறான்
என்னைப் போல!

இனி இல்லை...! (No more!)

இக்கவிதையின் கடைசி வரிக்காக காத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்..!

நொடிக்கு நூறுமுறை,
நினைத்து நினைத்து என்னை,
நெகிழ்ந்த அவள்,
இனி இல்லை!

செல்லமாய் எனைக் கொஞ்சி,
சின்னதாய் கோபம் காட்டி,
அழுது,
சிரித்து,
சிரிக்க வைத்து..
அது கண்டு ரசிக்கும் அவள்
இனி இல்லை...!

காதுமடல் திருகி,
கண்ணமெல்லாம் வருடும்,
கைகோர்த்து நான் நடந்த விரல்கள்..
இனி இல்லை...!

ஈரம் சொட்ட சொட்ட...
என்னை முத்தமிட்ட..,
இதமான அவளின் இதழ்கள்,
இனி இல்லை...!

தான் சுவைத்து,
பின் படைத்து..
நான் உண்ட,
பின் உண்ணும..
மென் நாக்கும், வெண் பற்களும்
இனி இல்லை...!

தன்னையே தலையனையாக்கி..
தலைகோதி துங்கவைத்து,
தன்னினும் என்னையே,
எப்போதும் நேசித்த அவள்
இனி இல்லை...!


சுற்றும் பூமி – இங்கே,
சூனியமாய்த் தெரிய
என்னை,
சுற்றி சுற்றித் திரிந்த அவள்
இனி இல்லை...!

நிழல் போல இருந்தவளை,
அனல் திங்க பார்த்திருந்தேன்!

புகையாகி போனவளை,
பூமியெல்லாம் தேடுகிறேன்!

இல்லையென தெரிந்திருந்தும்,
இயற்கையெல்லாம் அறிந்திருந்தும்..
பாவை உனை தேடுகிறேன்...
பைத்தியம் போல் பிதற்றுகிறேன்!

பாவி எந்தன் துயர்துடைக்க..,
உன் போல,நான் வளர்க...
மகளாக பிறப்பாயோ?!

உன் திருவயிற்றில் எனை வளர்த்த தாயே!

மலர் சூடும் மலர்...! (O! Jasmine!)


மன மகிழ்வான மாலை நேரம்... தோழி ஒருவள் எதர்ச்சையாக மல்லிகைப் பூவைப் பற்றி பேச.. மனம் அந்த மலர்களோடு பயணிக்கத் துவங்கியது... என் உடல் நுகர்ந்து, மனம் மகிழ்ந்ததை.. இதோ, இங்கு வார்த்தைகளாய் வடித்துள்ளேன்...



செடியின் மடியில்
தவழும் தேன்குடம்!

தென்றலின் ஊஞ்சலில்
ஆடிடும் சிறுநிலா!

நறுமணம் வீசி
நகைக்கும் நங்கை!

பெண்கள் சூடும்
வெள்ளைத் தங்கம்!

மண்ணில் முளைத்து
மிளிரும் வைரம்!

சின்ன சின்னதாய்
சிரிக்கும் மேகம்!

படர்ந்து விரிந்து
ஒளிரும் பனித்துளி!

மகரந்தம் கக்கி
மனம் ஈர்க்கும் காதலி!

மல்லிகை!!!
மலர்களே சூடும், மலர்களின் மகுடம்!

காதல்..!!! (Love??????!!!!)


இந்த ஒற்றை சொல்லில் ஏனோ அத்துனை பெரிய காந்தசக்தி ஒளிந்திருக்கிறது!! இதோ.., இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னையும் சரி, படித்துக் கொண்டிருக்கும் உங்களையும் சரி.. 'காதல்' உச்சரித்த மாத்திரத்தில் பரவசமடைய வைக்கிறது!!



ஆண்டவனில் தொடங்கி நீங்கள், நான் என அத்தனை பேரையும் (ஹிட்லர் உள்பட!), இந்தக் காதல் ஆட்டிபடைத்திருக்கிறது!



இந்த பூமியின் மொத்த உயிரனைத்தையும் பிணைத்திருக்கும் ஒரே மந்திரச்சொல் "காதல்"...!



'காதல்'... இதயத்திற்கு கட்டப்படும் இறக்கை... மனதிற்கு சூடப்படும் மகுடம்.. நெஞ்சினில் நடப்படும் நந்தவனம்...



இவ்வளவு ஏன்?! உச்சி வெயிலில் உட்கார்ந்திருக்கும் ஒருவனையே.. இப்படி கவிதை நடையில் எழுத வைக்கிறதே.. இது தான் காதலின் மகத்துவம்!



“காதல்” என்பது... அது சரி! இதோடு 11வது முறையாக அண்ணனின் பெயரை தாங்கி, கைப்பேசி கதரிக்கொண்டிருக்கிறது! (இங்கேயும் காதலுக்கு தடங்கலா!?) இனியும் நான் தாமத்தித்தால் அண்ணனே நேரில் வந்து கதற கதற அடிக்ககூடும்..!!!



இப்போதைக்கு விடை பெறுகிறேன்.. இக்கட்டுரையை விட்டு மட்டும்... காதலை விட்டல்ல!!! (நான் விட்டாலும் காதல் என்னை விடாது என்பது வேறு விஷயம்!)



கிறுக்கல் தொடரும்....

புரியாத புதிர்......?!?!?!?!!! (An unknown puzsle!)



கற்கண்டு,
பகற்கனவு,
நற்சான்றோர்,
தற்பெருமை!

முள்வேலி,
முயற்குட்டி,
முற்பிறவி,
முழுநிலவு!

சுண்ணாம்பு,
கண்ணாடி,
மைப்பேனா,
கையிறுப்பு!

பச்சரிசி,
பளிங்குதரை,
புற்றீசல்,
புவியீர்ப்பு!

அறிந்த வார்த்தைகள் – இங்கே
அர்த்தமற்ற வரிசையில்!
புரிந்த சொற்கள் –இங்கே
பொருளற்ற பிணைப்பில்!
விரும்பும் கவிதை-இங்கே
விரும்பாத வடிவத்தில்!

இப்படித்தான் வாழ்க்கையும்....!!!!!

அறிந்ததை அர்த்தமற்றதாக்கும்!
தெரிந்ததை தேவையற்றதாக்கும்!
பொருளற்று பிணைத்து,
‘விதி’ விடுத்து இணைத்து,
நாம் விரும்பாத போதும்
பதில் கேட்க்கும்!!

ஓர் புரியாத புதிர் போட்டு.....!?!?!?!

நீ இல்லாத நாட்கள்.......... (Days without you!)



நீ இல்லாத நாட்கள்...
நிறமற்ற பூக்களாய்,
எந்தன் நந்தவனம்!

ஒளியற்ற வின்மீன்களாய்,
எந்தன் வானம்!

நீ இல்லாத நாட்கள்...
வலுவற்ற அசைவுகளாய்,
எந்தன் சிறகுகள்!

உறங்காத கண்களாய்,
எந்தன் இரவுகள்!

நீ இல்லாத நாட்கள்...
இசையற்ற சொற்களாய்,
எந்தன் பாடல்!

பொருளற்ற பக்கங்களாய்,
எந்தன் புத்தகம்!

நீ இல்லாத நாட்கள்...
முளைக்காத செடிகளாய்,
எந்தன் விதைகள்!

பதிக்காத பாதங்களாய்,
எந்தன் பாதை!

நீ இல்லாத நாட்கள்...
எழுதாத எழுத்துக்களாய்,
எந்தன் பேனா!

துடிக்காத தசைகளாய்,
எந்தன் இருதயம்!

மொத்தத்தில்,
‘நான்’ இல்லாத ‘என்’னையும்
அந்த,
‘என்’னுள் உன்னையும் கண்டேன்!
நீ இல்லாத நாட்களில்..!!!

காதல் மொழி...! (Sound of Love!)




அத்தனை கூட்டத்திலும்,

அழகாக அழைக்கிறது
அந்த ஒலி!

நித்திரையின் நடுவினிலும்,
நிதர்சனமாய் நெருடுகிறது
அந்த ஒலி!

பரந்த பூமியெங்கும்,
பால்நிலா போல் பொழிகிறது
அந்த ஒலி!

முப்பொழுதும் எப்புறமும்,
முத்தாய்ப்பாய் மிளிர்கிறது
அந்த ஒலி!

காற்றிலே கலந்து,
என் மூச்சாகி நிற்கிறது
அந்த ஒலி!

ஆழ்கடலின் அடியடைந்து,
அங்குமிங்கும் சிதற்கிறது
அந்த ஒலி!

எற்றிசையும் எங்கெங்கும்,
எதிரொலித்து நிற்கிறது
அந்த ஒலி!

காதில் நுழைந்து,
நாளத்தில் வழிந்து,
இதயத்தை நிரப்புகிறது
அந்த ஒலி!

சொல்லிய இத்தனை போல்,
சொல்லாத எத்தனையோ உருவெடுத்து,
சுற்றும் பூமியுள்
சுற்றி சுற்றி வருகிறது
அந்த ஒலி!


எந்த ஒலி???!



திகட்டாத தீங்கரும்பாய்,
இனிக்கின்ற இதழ்கொண்ட
செதுக்காத சிலை வடிவாம்!

என்னவளின்
எடுப்பா பாதங்களில் - துள்ளி
துடுக்காக நடைபோடும் – வெள்ளி
கொலுசெழுப்பும் அந்த செல்ல ஒலி!!!

அது ஓலி அல்ல!?
அவள் என்னைக் கொஞ்சும்
காதல் மொழி!!

காதல் சாரல்...!!! - I (Its Love! - part I)



காதல் புரிந்தால்
கவிதை வருமாம்?!
இங்கோ,
கவிதையாய் நீ வந்தாய்,
காதல் வந்தது!



உன்னை பிடிக்கும் என்பதாலும்,
உனக்கு பிடிக்கும் என்பதாலும்
உன்னை விட என்னையே என்க்கு .
அதிகம் பிடிகிறது!!!



கடவுள் படைத்த அழகிய கவிதை
"காதல்"...
காதல் ரசித்த அழகிய கவிதை
"நீ.....!"



உன்னை தேடுகிறது என்றேன்
உன்னுள் தேடிப்பார் என்றாய்...
நீயின்றி நானில்லை என்றேன்
நானே நீதான் என்றாய்..!!!



'என் மீது காதல் கொள்ள காரணம் என்ன?' - கனிவாய் கேட்கிறாய்
கண்ணே!
உன்னைக் கண்டால் காதலுக்கே காதல் வரும்!
கவிஞன் எனக்கு வராதா?

"ஆம்" சொல்ல ஆசை!!! (Say Yes!!!)


சிறகில்லா தேவதை! - உன்
கரம் பற்ற ஆசை!
தவழ்ந்தாடும் கூந்தல்தனை
மடி தாங்க ஆசை!


கயல் போன்ற உன் கண்ணின்,
கருவிழியில்,
எனைக் காண ஆசை!
சிறுத்த காதுமடல் - அதைச்
செல்லமாய்க் கடிக்க ஆசை!


என் மூக்கால்,
உன் மூக்கை நான் வருடி,
மூச்சோடு மூச்சணைக்க ஆசை!
இனிக்கின்ற இதழ் அதனை,
இனிதே கொஞ்சம் தீண்ட ஆசை!


தித்திக்கும் உன் குரலை,
திகட்டும் வரை பருக ஆசை!
நீராடி நீ நிற்க,
உன் தலை துவட்டி,
என் தோள் சாய்க்க ஆசை!


தாலாட்டுப் பாடியுனை,
தூங்க வைக்கவும் ஆசை!
உனதாசை அதையறிந்து,
எனதாசையாக்கி,
நிறைவேற்ற ஆசை!


இன்னும்... இன்னும்...

எத்தனையோ ஆசைகள்,
உன்னிடத்தே எனக்குண்டு!
அத்துனையும் அரங்கேற்ற,
அனுமதிப்பாயோ?!!

நீ,
"ஆம்" சொல்ல ஆசை!!!

வெட்கம்...!!!! (Shy!)










கண்களால் உணர்த்த முடியாததை,
இதழ்களால் மொழிய முடியாததை,
நளினத்தால் புரிய வைக்கிறது,
'வெட்கம்'!!!











கண்கள் கலந்து,
காதல் மிகுந்து,
ஊடல் துவங்க,
'வெட்கம்' - சற்று
வெட்கத்
தோடு விடை பெற்றது!

















காணாத போது,
கைப்பேசி வழியே,
கணம் தோறும கலந்தோம்!

குரல் கேட்கா போதும்,
குறுஞ்செய்தி வழியே,
குறைவின்றி குலைந்தோம்!

சத்தங்களோடு,
முத்தங்களும் மொழிந்தோம்!

இதோ,
இன்று!
அருகருகே நிற்கின்றோம்!

உன் கண்ணில்,
எனைப் பார்த்து,
என் கண்கள்,
சிரிக்கிறது!

என் இதழின்,
நகை பார்த்து,
உன் இதழ்கள்,
ரசிக்கிறது!

இதுவரையில்,
இல்லாத 'புதுவெட்கம்',
எங்கிருந்தோ முளைக்கிறது!

உனைக்கண்டு நானும்,
எனைக்கண்டு நீயும்,
வெகுளியாய் வெட்கப்பட்டு நிற்க!!

நம்மின் காதல் கண்டு ரசித்து நிற்கிறது 'வெட்கம்'!!

தனிமை.... (I'm alone again:( )


ஞாயிற்றுக்கிழமை..
பௌர்ணமி இரவு..
பூமிக்கு நிலவு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தது.
நள்ளிரவின் நிசப்தத்தை தெருவோர நாய்களும், கூர்காவின் விசிலும் குலைத்துக் கொண்டிருந்தன.
A/Cன் செயற்கையான குளிரில் Laptopஉடன் உறவாடிக் கொண்டிருந்த 'சம்பத்குமாருக்கு' வயது 26. இந்தியா முழுவதும் தனது ஆறு கிளைகளை பரப்பிக் கொண்டிருந்த 'Sambath Group Of Companies'ன் நிர்வாக இயக்குனர்.
அரட்டை அடிக்கும் நண்பர்கள், ஞாயிற்றுக்கிழமை சினிமா என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு பிசினஸ் உடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருப்பவன். பெரிய ஜோக்குகளுக்கு கூட சிறியதாய் சிரிக்காத கண்டிப்பான பேர்வழி!
பாலிவுட் கதாநாயகர்களைப் போன்ற மீசை இல்லாத முகம், தெளிவான கண்கள், பணக்கார உடல்!
'Beep' அவனது கவனத்தை சிதறடித்து முனங்கியது செல்போன். Lapatopல் இருந்து கண்களை அகற்றி செல்போனின் SMSஐ படித்தான் சம்பத்.
"Love has no reason,
If it has, It is not Love"
-munbu Shakespeare, ipothu naan
Gud ni8.. swt drms..
திவ்யா... அவனது அனுமதி கேட்காமலே அவனுடைய உதடுகள் முணுமுணுத்தன.. சம்பத்தின் கண்கள் மகிழ்ச்சியால் அகல விரிந்தன.. அவனது ஒவ்வொரு நரம்பிலும் ஹார்மோன்கள் நடனமாடத் துவங்கின! 'அவளது' பெயரை உச்சரித்ததால் பெருமை கொண்டது போல் அவனது உதடுகள் புன்முறுவல் பூத்தன..
திவ்யா... திவ்யா... அவனது இதயம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது!
திவ்யா - BBA பட்டதாரி, சம்பத்தின் அலுவலகத்தில் 'Customer Management' பதவி அவளுக்கு, மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் நீண்ட கண்களும், எந்த ஒரு சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக மாற்றும் செய்கைகளும், பாரபட்சமின்றி அனைவரிடமும் பழகும் வெகுளித்தனமும் அவளது அடையாளங்கள்!.அலுவலகத்தில் சேர்ந்த முன்றே மாதத்திற்குள் சம்பத்தின் இறுக்கமான அலுவலகத்தை , கல்லூரி வகுப்பறை போல கலகலப்பாக மாற்றியவள்.
Interviewவின் போது அனைவரும் டென்ஷனாக அமர்ந்திருக்க, இயல்பாக கைகளில் பேனாவை சுழற்றி ரசித்து, விளையாடிக் கொண்டிருந்த திவ்யாவை பார்த்த முதல் பார்வையிலேயே சம்பத்துக்கு பிடித்துவிட்டது .
"சம்பத்...! நான் உங்களை பெயரை சொல்லி கூப்பிடுறதுல உங்களுக்கு ஆட்ச்சேபனம் இல்லையே ?"- சம்பத்தை அலுவலகத்தில் முதன் முதலில் பெயரை சொல்லி அழைத்தப்பெண் திவ்யா .
ஒரு முறை ஒரு முக்கியமான mail-க்கு திவ்யா பதிலளிக்காமல் விட்டு விட, அவளைக் கூப்பிட்டு கோபமாக கேட்டான் சம்பத்... சுண்டு விரலை பல்லால் கடித்துக்கொண்டு, கொஞ்சல் பார்வையுடன்... குலைவாய் அவள் .'cool boss, இப்ப அனுப்பிடுறேன், "less tension more work" என செந்தில் பாணியில் சொல்ல , சிரித்தே விட்டான்.
விவரம் தெரிவதற்கு முன்பே தன் தாயை இழந்து விட்டிருந்த சம்பத், பள்ளிப் படிப்பை ஊட்டி ஹாஸ்டல்களிலும், பின் MBA வரை இங்கிலாந்திலும் முடித்து விட்டு தனிமையை மட்டுமே துணையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். சம்பத்தின் தந்தை எத்தனையோ முறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய மறுத்து, அவரை டெல்லி அலுவலகத்தில் இருக்கச் செய்துவிட்டு , சம்பத் சென்னையில் தனிமையாய் வாழ்ந்து வந்தான்.
சம்பத்தின் வாழ்வில் எல்லாம் கிடைத்தது அவன் நினைத்ததெல்லாம் நடந்தது, சொல்லியதை செய்ய எத்தனையோபேர் இருந்தனர், நினைத்ததை முடிக்க பணம் இருந்தது, சமூகத்தில் பெரிய பெயர் இருந்தது. ஆனாலும் அவன் வாழ்வின் ஒரு பகுதி எப்பொழுதும் வெறுமையாகவே இருந்தது!
திவ்யா, அந்த இடத்தை மெல்ல மெல்ல நிரப்பிக் கொண்டிருந்தாள். அன்பு, பாசம், காதல் என்ற உணர்ச்சிகளே இல்லாமல் அவன் மனம் பாலைவனமாய் வறண்டிருந்தது, திவ்யா நீரூற்றாய் பெருகத் துவங்கியிருந்தாள்!
எத்தனையோ சூரியன்களால் போக்க முடியாத அவன் மன இருளை, திவ்யா ஒற்றை நிலவாய் ஒளியேற்றிக் கொண்டிருந்தாள்!
நேர்க்கோடாய் இருந்த சம்பத்தின் வாழ்வை,வளைந்த கோடுகளாய் மாற்றி வர்ணக் கோலங்கள் போடுக் கொண்டிருந்தாள்!
இப்பொழுது சம்பத்தும் ரொம்ப மாறியிருந்தான். தனக்கு பிடித்த பச்சை நிறத்தை விடுத்து, திவ்யாவுக்கு பிடித்த ஊதா நிறத்தை அணிந்து வந்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் beachற்கு சென்று திவ்யாவை நினைத்துக்கொண்டே சுண்டல் சாப்பிட்டான். NDTVக்கு பதிலாக கமல்ஹாசனின் காதல் பாடல்களையும், வடிவேலுவின் ஜோக்குகளையும் ரசிக்கத் துவங்கினான். இக்கட்டான நேரங்களில் கூட அலுவலகத்தில் கோபப்படாமல் நிதானமாக முடிவெடுத்தான்.
அவனது உதட்டில் புன்முறுவல் எப்பொழுதும் ஒட்டியிருந்தது. அவனது ஓரக் கண்கள் திவ்யாவை ரசித்துக் கொண்டே இருந்தன!
இப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை சம்பத் தனியாக கடற்கரையில் அமர்ந்திருக்க, திவ்யா திடீரென பின்னாலிருந்து கண்களைப் பொத்தினாள்.
திவ்யா, யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்?
சம்பத் அப்பொழுது ஏழாவது சொர்க்கத்தில் இருந்தான்! அவனுக்குத் தெரியாதா? அது திவ்யா என்று?!
சம்பத், தி..வ்..யா.. ஒவ்வொரு எழுத்தாய் உச்சரித்தான்.
சற்றும் யோசிக்காமல் சம்பத்தின் அருகில் அமர்ந்தாள். சம்பத், நீங்க beachக்கு கூட வருவீங்களா?, ஆபிஸ்ஸ விட்டு எங்கயும் போக மாட்டீங்கன்னு கேள்விப்பட்டன்
சம்பத்தின் மனம் ஆயிரம் ஆயிரம் பதில்களை சொல்ல நினைத்தது. ஆனாலும் சின்ன சிரிப்பை மட்டும் பதிலாக அளித்தான்.
சம்பத், நீ வாரவாரம் இங்க வருவியா..?
திவ்யா, இல்ல பாஸ் எப்பவாவது ப்ரெண்ட்ஸோட வருவன். மெரினாவில் ஒரே லவ்வர்ஸ் மயம், அதனால நானும் யாரையாவது லவ் பண்ண ஆரமிச்சவுடன தான் அடிக்கடி வரணும்னு முடிவு பண்ணிருக்கேன் கண்ணடித்து கிண்டலாகச் சொன்னாள்.
நீங்க எப்படி சம்பத்? Any love affiars..? இல்ல சும்மா சைட் அடிக்க வந்தீங்களா? இயல்பாகக் கேட்டாள்.
சம்பத்திற்கு ஒரு நிமிடம் நீ என்னைக் காதலிக்கிறாயா? என நேருக்கு நேராக கேட்டு விட வேண்டும் போலத் தோன்றியது. ஏதோ ஒன்று தடுக்க, இப்போதைக்கு இல்ல, அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்? என்றான்.
பாஸ், உங்க பதில பாத்தா already யாருக்கோ ஹார்ட்ட கொடுத்துட்ட மாதிரி தெரியுது, சீக்கிரம் லவ்வ சொல்லிருங்க பாஸ், இல்ல சினிமால வர்ற மாதிரி கடைசி வர சொல்ல முடியாமலே போயிறப் போகுது தோழிகள் வர திவ்யா விடை பெற்றுக் கொண்டாள்.
அன்றிலிருந்து , சம்பத் உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தான் அவன் பிசினஸில் சிறு வயதிலேயே சாதித்த புத்திசாலி என்றாலும் கூட, திவ்யாவிடம் நேருக்கு நேராகப் பேச தயங்கினான்.
'திவ்யா ஒரு வேளை மறுத்துவிட்டால் ...', அந்த எண்ணமே அவனுக்கு வேதனையளித்தது. மனம் வேறெதிலும் ஈடுபட மறுத்தது. அவன் அறிவையும், இதயத்தையும் திவ்யா முழுவதுமாய் ஆகிரமித்துக்கொண்டிருந்தாள்.
மூன்று நாட்களுக்கு முன்பு, திவ்யா சம்பத்தின் அறைக்கு வந்தாள்,
திவ்யா, "சம்பத், நாளைக்கழிச்சு அண்ணன் பையனுக்கு திருநெல்வேலியில் இருக்குற குலதெய்வம் கோவில்ல மொட்ட போடுறாங்க",
சம்பத் , "சோ?" சிரித்துக்கொண்டே கேட்டான்.
திவ்யா, "சோ ...எனக்கு three days leave வேணும்".
சம்பத் விளையாட்டாக "மொட்டைஉனக்கா, உங்க அண்ணன் பையனுக்கா ...?
திவ்யா செல்லமாக முறைத்தாள்.
திவ்யா 'இல்ல boss, அத்தை முறைக்கு நான் தான் போய் அய்யனாருக்கு பொங்கல் வைக்கனுமாம்'.
சம்பத், "ok, leave granted".
திவ்யா"thank you, boss". "Boss, உங்கக்கிட்ட ஒன்னு சொல்லணும்"...
திவ்யா தயங்கி தயங்கி இழுத்தாள் ...
"இல்ல இப்ப வேண்டாம், திங்கள்கிழமை நான் surpriseஆ சொல்றேன், நான் ஒன்னு கேட்பேன் நீங்க கண்டிப்பா ok சொல்லணும், நீங்க ok சொல்லுவீங்கன்னு எனக்குத் தெரியும்", செல்லமாக கண்சிமிட்டிச்சென்றாள்.
சம்பத், மீண்டும் ஒரு முறை smsஐப் படித்தான், "Love has no reason...", 'நாளை திங்கட்கிழமை, திவ்யாவின் surprise எதுவாக இருக்கும் ...? ஒரு வேளை... நம்மைப் போன்று அவளும்...', சம்பத்தின் உதடுகள் அகலமாய் விரிந்தன. அந்த surprise எதுவாக இருந்தாலும் சரி தன்னுடைய காதலை நிச்சயமாக சொல்லி விட வேண்டும் என்று உறுதி கொண்டான்.
Laptop திறந்திருந்தது
சம்பத்தின் உதட்டில் இன்னமும் புன்முறுவல் தவழ்ந்து கொண்டேயிருந்தது. அவன் கண்கள் மூடியிந்தது... அவன் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
******************************************
பூமி சூரியனை பிரசுவித்து மூன்று மணி நேரம் ஆகியிருந்தது.சம்பத் திவ்யாவிற்காக, ஊதா நிற சட்டையுடனும், கருப்பு நிற கோட்டுடனும் ஆவலாய் காத்திருந்தான்.
தன் வாழ்வின் முக்கியமான திருப்புமுனை நிகழப் போவதாக அவனது உள் மனம் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தது.
இறுதியில் திவ்யா வந்தாள்...
சம்பத்தின் பரபரப்பு உச்சத்தை அடைந்தது ...
சம்பத், திவ்யாவை தனது அறைக்கு கூப்பிடலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, திவ்யா சம்பத்தின் அறைக்கு வந்தாள்...
திவ்யா,'Good morning, Boss'
சம்பத் ,'Very Good morning ,function முடிஞ்சதா ...?
திவ்யா, "ம்,ரொம்ப கிராண்டா !!!...
சம்பத் மனதை திடப்படுத்திக்கொண்டு சொல்ல முற்பட்டான்,
சம்பத், "திவ்யா...ஒரு விஷயம்..."
திவ்யா, "Boss..boss..office விஷயம் எல்லாம் அப்புறம், முதல்ல என்னோட surprise...
சம்பத், “ம் ..சொல்லு", சம்பத்துக்கு தெரிந்து திவ்யா முதன் முதலாக வெட்கப்பட்டாள்...
திவ்யா, “அது..வந்து..வர்ற 15ந் தேதி எனக்கு Marriage fix ஆயிருக்கு."
சம்பத்தின் உடலில் ஏதோ ஒரு நரம்பு பட்டென்று அறுந்தது போல் இருந்தது. அவனது உடல் அப்படியே அசையாமல் இருந்தது. அவனது உயிர், எங்கெங்கோ விவரிக்க முடியாத பயங்கரமான இடங்களுக்கு பயனித்துக்கொண்டிருந்தது.
"Chennaiல தான் Software engineerஆ இருக்கார், எங்களுக்கு தூரத்து சொந்தம், அப்புறம், எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்ததா..."
திவ்யா பேசிக்கொண்டே போனாள், சம்பத் உணர்ச்சியற்ற பதுமையாய் உட்கார்ந்திருந்தான்... திவ்யாவின் குரல் அதல பாதாளத்திலிருந்து வருவது போல் அவனது காதுகளில் விழுந்து கொண்டிருந்தது...
"பாஸ் என்னோட கல்யாணத்த நீங்க தான் முன்னாடி நின்னு நடத்தி வைக்கணும், மாட்டேன்னு சொல்லிராதிங்க",
திவ்யாவின் கடைசி வார்த்தை சம்பத்தின் காதுகளில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.
இரவாகியிருந்தது...சம்பத்துக்கு வாழ்க்கையே சூன்யமாய் போய் விட்டதாய் தோன்றியது. உலகமே வெறுமையாய் காணப்பட்டது... திவ்யாவின் கடைசி வார்த்தைகளைத் தவிர யார் பேசியதும் அவன் காதுகளில் விழவில்லை...எந்த ஒரு நிகழ்வும் அவன் மனதில் பதியவில்லை...
பிறந்தது முதல் அவனை விடாது தொடர்ந்து வந்த தனிமை, திவ்யாவால் மூன்று மாதங்களுக்கு தடைப்பட்டிருந்தது, இப்பொழுது மீண்டும் தனிமை அவனை ஆக்கிரமித்துக் கொண்டது. முந்தைய தனிமை சம்பத்தை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை... ஆனால் திவ்யா விட்டுச் சென்ற தனிமை...?
சம்பத்திற்கு தான் ஒருவன் மட்டுமே பூமியில் இருப்பது போல் தோன்றியது. அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் தனிமையின் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தது...
தெருவோர நாய் இன்று அதிகமாக குரைத்தது..
முழு நிலவு சற்று தேய்ந்திருந்தது..
மீண்டும் திவ்யாவின் SMS வந்தது....!

தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....! தமிழ்....!

பின்பற்றுபவர்கள்

தமிழ்ப் பித்தர்கள்...

என்னைப் பற்றி

வே.கணேஷ் உலகத் தாய் பெற்றெடுத்த இந்தியத் தாயின் புதல்வன்.... நாவில் தமிழ்த் தாயின் திருப்பெயரை நாள்தோறும் உச்சரிக்கும் தமிழன்....! பெருமை மிகு வங்கியின் ஊழியன்...! பெரும் கனவோடும், கலை உணர்வோடும், கவிதை வரிகளோடும் வாழும் பித்தன்......

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

கவிதைகள்